SELANGOR

ஐந்து எல்.ஆர்.டி. நிலையங்களுக்கு மீண்டும் புத்துயிர்- நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு

ஷா ஆலம், அக் 17- மூன்றாம் கட்ட இலகு ரயில் திட்டத்தில் (எல்.ஆர்.டி.3)
ஐந்து நிலையங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பது என்ற அரசாங்கத்தின்
முடிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த எல்.ஆர்.டி. நிலையங்களை
மீண்டும் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம்
பொதுமக்கள் பெரிதும் பயன் பெறுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது என்று
அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் இந்த முடிவினால் வட்டார மக்கள் சிறந்த பொது
போக்குவரத்து வசதியைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று
ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் மற்றும் கிள்ளான்
நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினர்.

ஷா ஆலம் மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாகும். தங்கள்
இருப்பிடத்திற்கு அருகிலுள்ள நிலையங்களை அவர்கள்
பயன்படுத்துவதற்கு இனி வாய்ப்பு கிட்டும் என்று அஸ்லி சொன்னார்.

ராஜா மூடா மற்றும் புக்கிட் ராஜா நிலையங்கள் மீண்டும் செயல்படுவதன்
மூலம் தனது தொகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில்
சிறப்பான பொது போக்குவரத்து இணைப்பு ஏற்படுவதற்குரிய சாத்தியம்
ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

ராஜா மூடா நிலையம் செக்சன் 6 மற்றும் செக்சன் 2 குடியிருப்புப்
பகுதிகளுக்கு அருகிலும் புக்கிட் ராஜா நிலையம் செக்சன் 7 (மேற்கு)
மற்றும் ஐ-சிட்டிக்கு அருகிலும் அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, அரசாங்கத்தின் இந்த முடிவை வரவேற்ற கிள்ளான்
நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், பொதுமக்கள் நீண்டகாலமாக
எதிர்நோக்கி வரும் போக்குவரத்துப் பிரச்சனைக்கு ஆக்ககரமான தீர்வு
காண்பதில் இந்த திட்டம் பெரிதும் உதவும் என்றார்.

கிள்ளான் தொகுதியிலுள்ள புக்கிட் ராஜா மற்றும் பண்டார் பொட்டானி
நிலையங்கள் மீண்டும் அமைக்கப்படுவதை தாம் பெரிதும் வரவேற்பதாக
அவர் தெரிவித்தார்.

முந்தைய பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது நிறுத்தப்பட்ட ஐந்து
எல்.ஆர்.டி.நிலையங்களின் கட்டுமானம் தொடரப்படும் என்று கடந்த
வெள்ளிக்கிழமை 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை
தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அறிவித்தார்.

டிரோப்பிகானா, ராஜா மூடா, தெமாஸ்யா, புக்கிட் ராஜா, பண்டார்
பொட்டானிக் ஆகியவையே அந்த ஐந்து நிலையங்களாகும்.


Pengarang :