ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் தம்பதியர் உள்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், அக் 20– இரண்டரை லட்சம் வெள்ளியை உட்படுத்திய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பில் கணவன்-மனைவி மற்றும் ஆடவர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பாலஸ்தீன ஆடவர் ஒருவரைக் கடத்தியது தொடர்பில் இம்மூவர் மீதும் ஏற்கனவே இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி முகமது காஃபில் சே அலி முன்னிலையில் தங்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை நிடராஹயு ஜைனால் (வயது 34), அவரின் கணவர் ராய்ஃபாபி அம்டான் (வயது 40) மற்றும்  தெங்கு அரிப் பொங்சு தெங்கு ஹமிட் (வயது 40) ஆகிய மூவரும் மறுத்து விசாரணை கோரினர்.

அம்மூவருக்கும் எதிராக 2001ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை, பயங்கரவாத நிதியளிப்பு எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பொருளீட்டுதல் சட்டத்தின் 4(1)(பி) பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிருபிக்கப்படுவோருக்கு கூடுதல் பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சட்டவிரேதமாகப் பெறப்பட்டத் தொகையில் ஐந்து மடங்கு அபராதம் அல்லது 50 லட்சம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

நிடராஹ்யுவை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 60,000 வெள்ளி ஜாமீனிலும் ரபாஃபி மற்றும் தெங்கு அரிஃப் ஆகியோரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 20,000 வெள்ளி ஜாமீனிலும் விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இந்த வழக்கின் மறு விசாரணை வரும் நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Pengarang :