MEDIA STATEMENTNATIONAL

பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்புத் துறை

பெக்கான், அக் 22- தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குச் சொந்தமான 1,144 வாகனங்கள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்ட சொத்துகள் சோதனையிடப்பட்டு அவை நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 நாடு முழுவதும் உள்ள 337 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அந்த சாதனங்கள் எந்நேரத்திலும் குறிப்பாக மழைகாலத்தின் போது பயன்படுத்தப்படுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று ஊராட்சி மேம்பாட்டு அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (வீடமைப்பு மற்றும் சமூக நல்வாழ்வு) சுஹாய்மி அலி அகமது கூறினார்.

சோதனைக்குட்படுத்தப்பட்ட சாதனங்களில் பல்வகை பயனுக்கு உகந்த இலகு ரக மற்றும் கனரக போக்குவரத்து வாகனங்கள், நீர் சார்ந்த ஊர்திகள், ஹெலிகாப்படர் மற்றும் ட்ரோன் போன்ற வான் சாதனங்களும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

தீயணைப்புத் துறையின் தளவாடங்கள் மீதான விரிவான சோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்புத் துறை உறுப்பினர்கள் மற்றும் சாதனங்களை இந்த தயார் நிலை முன்னேற்பாடு உள்ளடக்கியுள்ளது. கூட்டு பயிற்சி, ரோந்து நடவடிக்கை, ஆபத்து மிகுந்த பகுதிகள் மீதான இடர் மதிப்பீடு ஆகியவையும் அதில் அடங்கும் என்றார் அவர்.

இது தவிர, தீயணைப்புத் துறையின் உதவி தேவைப்படக்கூடிய நிலச்சரிவு, மரங்கள் சாய்தல் மற்றும் சில இடங்களில் ஏற்படும் போக்குவரத்து துண்டிப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு 2023/2024 வடகிழக்கு பருவமழை தயார் நிலை மீதான நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

  


Pengarang :