ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை பூலோ தொகுதியில் இவ்வாண்டு 37 மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்- டத்தோ ரமணன் தகவல்

கோலாலம்பூர், அக் 26- நாடாளுமன்றத் தொகுதிக்கான மக்கள் நட்புறவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுங்கை பூலோ தொகுதியில் 37 அடிப்படை வசதி மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

அந்த 37 திட்டங்களில் ஆறு பொது வசதி மேம்பாட்டை அடிப்படையாக கொண்டிருந்த வேளையில் பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களை தரம் உயர்த்துவது தொடர்பான எட்டு திட்டங்களும் அக்காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவை  தவிர, நான்கு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தல மேம்பாட்டுத் திட்டங்கள், 12 தேசிய பள்ளி புனரமைப்பு மற்றும் நிர்மாணிப்புத் திட்டங்கள், ஐந்து தேசிய இடைநிலைப் பள்ளி தரம் உயர்த்தும் திட்டங்கள் மற்றும் இரண்டு தாய் மொழிப் பள்ளி சீரமைப்புத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் சொன்னார்.

மக்கள் நட்புறவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 20 லட்சம் வெள்ளியை மானியமாக வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொகையின் மூலம் தொகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில மேம்பாட்டு ஒருங்கிணைப்பு பிரிவின் (ஐ.சி.யு.) கண்காணிப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 லட்சம் வெள்ளி மானியத்தை சுங்கை பூலோ தொகுதி முழுமையாக பயன்படுத்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

மக்களவையில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :