ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மூன்று இளம் பிள்ளைகள் கொண்ட வேலை செய்யும் தாய்மார்களுக்கு வெ.1,000 உதவித் தொகை

ஷா ஆலம், அக் 26- வேலை செய்யும் பெண்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் சிலாங்கூர் அரசு சிறார் பராமரிப்பு உதவித் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்திலுள்ள 5,000 பெண்கள் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

பன்னிரண்டு வயதுக்கும் கீழ்பட்ட மூன்று பிள்ளைகளை கொண்ட வேலை செய்யும் பெண்கள் மாதம் 1,000 வெள்ளியை உதவித் தொகையாகப் பெறுவதற்கு மாமாகெர்ஜா என்ற உதவித் திட்டம் வகை செய்வதாக மகளிர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சஹாரி கூறினார்.

வேலை செய்யும் பெண்கள் எதிர்நோக்கும் குழந்தை பராமரிப்பு செலவின சுமையை மாநில அரசு உணர்ந்துள்ள காரணத்தால் 50 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் வாயிலாக வேலை செய்யும் பெண்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி அல்லது பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள மார்ஹிடாய்யா ஹோட்டலில் இந்த திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் நோக்கத்திற்கேற்ப ஆள்பலத் துறையில் மகளிரின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவதற்கு இந்த திட்ட அமலாக்கம் பேருதவி புரியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தரமான குழந்தை பராமரிப்பு மையங்களை உருவாக்குவதன் மூலம் பிள்ளைகளின் மேம்பாட்டை உறுதி செய்யும் அதேவேளையில் பெற்றோர்களும் மனநிம்மதியுடன் தங்கள் பணியை மேற்கொண்டு உற்பத்தியை பெருக்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் தாய்மார்கள் வரும் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி https://mamakerja.selangkah.my/  எனும் அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேல் விபரங்களுக்கு 800-22-6600 என்ற எண்களில் செல்கேர் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :