ECONOMYMEDIA STATEMENT

மலிவு விற்பனை தொடரும்- மாநில அரசு வெ.1 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 28- மக்களின் வாழ்க்கைச் செலவின சுமையைக் குறைக்கும் நோக்கில் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஏஹ்சான் ரஹ்மா  மலிவு  விற்பனை அடுத்தாண்டிலும் தொடரப்படும். இந்நோக்கதிற்காக மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 மக்கள் மேலும் கூடுதல் பலன்களை  பெறுவதற்கு ஏதுவாக மலிவு விற்பனைத் திட்டம் தரம் உயர்த்தப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

ஜூவாலான் ஏஹ்சான் ரஹ்மா திட்டம் அடுத்தாண்டும் தொடரும். இந்நோக்கத்திற்காக மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற பாலஸ்தீன மனிதாபிமான அறக்கட்டளைக்கு மாநில அரசின் சார்பில் நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் வரை மாநிலம் முழுவதும் 2,400 மலிவு விற்பனைகள் நடத்தப்பட்டள்ளன. இந்த விற்பனையின் வாயிலாக 6 கோடி வெள்ளி பெறப்பட்ட வேளையில் இந்த திட்டத்திற்கு மாநில அரசு 2 கோடி வெள்ளியை மானியமாக வழங்கியுள்ளது.


Pengarang :