ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

காஜாங்கில் நிலச்சரிவை சீரமைக்க  மாநில அரசு வெ.1 கோடி  ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 28- காஜாங், தாமான் புக்கிட் மேவாவில் ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைப்பதற்கு  அவசர நிதியிலிருந்து ஒரு கோடி வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் 27 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

தங்கள் குடியிருப்புகளை காலி செய்யும்படி பாதிக்கப்பட்டவர்களை பணித்துள்ளோம். இந்தப் பிரச்னை நீண்ட காலமாக நிலவி வந்தாலும் இதற்கு இன்னும் முழுமையானத் தீர்வு காணப்படவில்லை. அண்மைய சில தினங்களாக நில நகர்வு அதிகமாக உள்ளதால் நிலைமை மேலும் மோசமடைந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.

ஆகவே, அப்பகுதியில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவிருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடங்களில் வாடகைக்கு தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளை காஜாங் நககராண்மைக் கழகம் மேற்கொண்டு வருகிறது. அங்கு நிலத்தை வலுப்படுத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற்ற பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான அறக்கட்டளைக்கு மாநில அரசின் சார்பில் 10 லட்சம் வெள்ளியை வழக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு மந்நிரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார்.

நிலச்சரிவு ஏற்பட்டப் பகுதியில் அவசரகாலப் பணிகளை மேற்கொள்வதற்காக 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்.


Pengarang :