ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மின்சாரக் கார்களுக்கான சூப்பர்சார்ஜிங் நிலையங்கள் அதிகரிக்கப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 3- நாட்டில் அதிகளவில் மின்சாரக் கார்களுக்கான சூப்பர்சார்ஜிங் நிலையங்களை அமைப்பதன் மூலம் மின்சாரக் கார்களை பிரபலப்படுத்தி அதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தின் அளவைக் குறைக்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக்  கார்களின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு மாநில அரசு முழு ஆதரவு வழங்கும் என்று அவர் சொன்னார்.

சுங்கைவே, சன்வே பிரமிட் பேரங்காடி நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது டெல்சா சூப்பர்சார்ஜர் நிலையத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மின்சாரக் கார்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு  சிலாங்கூர்  மாநில அரசு எப்போதும் ஆதரவளித்து வரும் என்று அமிருடின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மலேசியாவில் 16 சூப்பர்சார்ஜிங் நிலையங்கள் உள்ளதாக கூறிய அவர், மலாக்காவில் விரைவில் மேலும் நான்கு புதிய நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.

சிலாங்கூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த நான்கு சூப்பர்சார்ஜர் டெல்சா கார் உரிமையாளர்களுக்கு பெரிதும் பயன் தரும் என அவர் குறிப்பிட்டார்.

அதிகப்பட்சமாக 250 கிலோவாட் சக்தி கொண்ட இந்த சூப்பர்சார்ஜர் மூலம் டெல்சா 3 ரகக் கார்கள் 282 கிலோ மீட்டர் பயணத்திற்கு தேவையான மின்சக்தியை 15 நிமிடங்களில் பெற முடியும் என்றார் அவர்.


Pengarang :