ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத் முன்னெச்சரிக்கைத் திட்டத்தை அமல்படுத்தும் முதல் ஊராட்சி மன்றமாக எம்.பி.எஸ்.ஜே. விளங்குகிறது

சுபாங் ஜெயா, நவ 3- வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே தயார் நிலை ஏற்பாடுகளைச் செய்துள்ள நாட்டின் முதலாவது ஊராட்சி மன்றமாக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் விளங்குகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் சிலாங்கூருக்கு ஏற்பட்ட கடுமையானப் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த பேரிடர்  நிவாரணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் டத்தோ ஜூல்கர்னாய்ன் சே அலி கூறினார்.

சொத்துகளுக்கு பாதிப்பும் மக்களுக்கு உயிருடற்சேதமும் ஏற்படுதைத் தவிர்க்க வெள்ளம் அபாயம் அதிகம் உள்ள 25 இடங்கள் மீது இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

மாநகர் மன்றத்திற்கும் மீட்புத் தரப்பினருக்கும் இடையே கடந்தாண்டு நடத்தப்பட்ட கலந்தாய்வின் வாயிலாக இந்த தயார் நிலைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு வழிகாட்டிகளை இந்த வழங்குகிறது என்றார்.

கடந்த 2021ஆம் ஆண்டு வெள்ளத்தின் மூலம் நாம் அதிகம் கற்றுக் கொண்டோம். இதன் தொடர்பில் சமூகத் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பிரையும் உள்ளடக்கிய விரிவான திட்டத்தை உருவாக்கியுள்ளோம் என்று அவர் மேலும் சொன்னார்.

இம்மாத மத்தியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தயார் நிலைப் பயிற்சிகளைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

வெள்ளம் அபாயத்தை கருத்தில் கொண்டு மாநகர் மன்றம் 60 தற்காலிக துயர் துடைப்பு மையங்களை தயார் செய்துள்ளதோடு வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 10 நீர் அளவை கண்டறியும் கருவிகளையும் பொருத்தியுள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :