ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புத் துறைக்கு முன்னுரிமை- ஆட்சிக்குழு உறுப்பினர் நம்பிக்கை

கோலாலம்பூர், நவ 5- இம்மாதம் 10ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மாநில அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை துறைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.

வீடமைப்பு தொடர்பான பல புதிய திட்டங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் போது அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுவதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

இந்த வரவு செலவுத் திட்டம் வீடமைப்பு துறை சார்ந்ததாக இருக்கும் என நான் கருதுகிறேன். இதன் தொடர்பில் புதிய திட்டங்களும் அறிவிக்கப்படும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை நாம் காத்திருப்போம். சிலாங்கூரில் குறிப்பாக வீடமைப்புத் துறை தொடர்பான பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள மிட்வேலி கண்காட்சி மையத்தில் பி.பி.இ.எக்ஸ். வீடமைப்புக் கண்காட்சியை தொடங்கி  வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் 60,000 சிலாங்கூர் கூ வீடுகளை நிர்மாணிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக மந்திரிபுசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இவ்வாண்டு இறுதிக்குள் 45,000 வீடுகளை பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் வரும் நவம்பர் 10ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும்.


Pengarang :