ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அடிப்படை வசதிகளின் மேம்பாட்டில்  ஊராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும்- மந்திரி புசார்

கோல லங்காட், நவ 19- மக்களின் நலனுக்காக அடுத்தாண்டு தொடங்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ஊராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு ஏதுவாக அனைத்து ஊராட்சி மன்றங்களும் தங்களின் நிதிக் கையிருப்பில் பத்து விழுக்காட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தவிர, மேலும் குறைந்த பட்சம் பத்து விழுக்காட்டு நிதியை சமூக மண்டபங்கள், பொது மண்டபங்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒதுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அந்த அடிப்படை வசதிகளை நவீனப்படுத்துவதற்கு மட்டுமின்றி பொது மக்கள் அந்த வசதிகளை சௌகர்யமான முறையில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக நிதி தொடர்பில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

இங்குள்ள கம்போங் எண்டா பொன்விழா மண்டபத்தில் உலக நகர திட்டமிடல் தினத்தின் மாநில அளவிலான கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய அமிருடின், சாலை, தெரு விளக்குகள், பொது மண்டபங்கள், சமூக மையங்கள் உள்ளிட் அடிப்படை வசதிகளை தரம் உயர்த்தும் முயற்சிகள் மீது அடுத்தாண்டு கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார்.

உலகின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மக்களின் குவிய மையமாக சிலாங்கூர் விளங்குவதால் நாம் இங்கு சில திட்டங்களை  அமல்படுத்தியாக வேண்டும். பல்லின மக்கள் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட பெருநகரமாக இது விளங்குவதால் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்த்தப்படுவது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார். 


Pengarang :