ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலம் ஆலய நிலப் பிரச்சனையைத் தீர்க்க மாநில அரசு உதவ வேண்டும்- சட்டமன்றத்தில் குணராஜ் வலியுறுத்து

ஷா ஆலம்,  நவ 19- இங்குள்ள செக்சன் 18, ஸ்ரீ மகா படபத்தர காளியம்மன் ஆலயம் தற்போது அமைந்துள்ள அதே இடத்தில் நிலை நிறுத்தப்படுவதற்கு மாநில அரசு உதவ வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்கடர்  ஜி.குணராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்த ஆலயத்தை வேறு இடத்திற்கு மாற்றாமல் அதே இடத்தில் தொடர்ந்து  நிலைத்திருப்பதை  மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த ஆலயம் தங்கள் குடியிருப்புப் பகுதியில் தொடர்ந்து வீற்றிருக்க வேண்டும் என்பது சுற்று வட்டார இந்துக்களின் விருப்பமாக உள்ளதால் நில உரிமையாளர்களான கே.பி.ஜே. மருத்துவமனைத் தரப்பினருடன் மாநில அரசு பேச்சு நடத்தி இவ்விவகாரத்திற்கு சமூகமானத் தீர்வைக் காண வேண்டும் என்று  அவர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து இன மற்றும் சமயத்தினரின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்துவரும் மந்திரி புசார் தலைமையிலான மாநில அரசுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அதே சமயம், இந்த ஆலயம் நீண்டகாலமாக எதிர் நோக்கி வரும் நிலப் பிரச்சனைக்கும் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த  ஆலயம்  ஷா ஆலம், செக்சன் 18 பகுதியில்  சுமார் 4,000 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது.

பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் வசமிருந்த இந்த ஆலய  நிலம் கே.பி.ஜே. நிறுவனத்திற்கு கைமாறியதைத் தொடர்ந்து   ஆலயத்தை அகற்றக் கோரும் கடிதத்தை அந்நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கியது.

இவ்விவகாரம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் கே.பிஜே. உள்பட பல்வேறு தரப்பினருடன் தொடர்ந்து பேச்சு நடத்திக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆலயத்தை அகற்றக் கோரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக கே.பி.ஜே. நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த ஆலய நிலத்தின் உரிமையாளரான கே.பி.ஜே. நிபுணத்துவ மருத்துவமனை நிறுவனத்திற்கு மாற்று நிலத்தை வழங்குவதன் மூலம் ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் முன்னெடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் மாநில அரசு நில அலுவலகம், ஷா ஆலம் மாநகர் மன்றம், கே.பி.ஜே. ஆகிய தரப்பினருடன் அவர் தொடர்ந்து பேச்சு நடத்தி வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நில உரிமையாளர்கள் ஆலயத்தைச் சுற்றிலும் தகரங்ளைக் கொண்டு வேலி அமைத்துள்ளனர். இதனால் ஆலயத்தில் வழிபாடுகளை நடத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.


Pengarang :