NATIONAL

மூன்று ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பில் 4,690 புகார்கள் பதிவு

ஷா ஆலம், நவ 21- சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த  2020 முதல் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம்  வரை மொத்தம் 4,690 குடும்ப வன்முறைபுகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களுடன்  ஒப்பிடுகையில்  இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக  சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் சிலாங்கூரில் மொத்தம் 813 குடும்ப வன்முறை புகார்கள் பதிவாகியுள்ளதை காவல்துறை புள்ளிவிவரங்களின் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.

அதிகபட்சமாக கோம்பாக்கில் 147 புகார்களும் காஜாங்கில் 91 புகார்களும்  பெட்டாலிங் ஜெயாவில் 79 புகார்களும்  பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

நேற்றிரவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் பங்கிட்  இயக்கத்தின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்குள்ள மாநில அரசு நிர்வாகக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்றார்.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி  முதல்  இவ்வாண்டு நவம்பர் 1ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 123 அழைப்புகளை “தாலியன் செலாமட்”  எனும் உதவி தொலைபேசி அழைப்புச் சேவை பெற்றதாக கூறிய அன்ஃபால்,  அவற்றில் 72 அழைப்புகள் குடும்ப வன்முறை தொடர்பானவையாகவும்  51அழைப்புகள் பொதுவான விஷயங்கள் தொடர்பானவையாகவும் இருந்ததாகச் சொன்னார்.

குடும்ப வன்முறை அல்லது கொடுமைப்படுத்துதல் தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள்  SELamat சேவையை 03-6419 5027 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.


Pengarang :