ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் இளைஞருக்கான வயது வரம்பு 30ஆக நிர்ணயம்- 2026 ஜனவரி முதல் அமல்

கோலாலம்பூர், நவ 24- மலேசியாவில் இளைஞருக்கான வயது வரம்பு 30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வயது வரம்பு வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி அமலுக்கு வரவுள்ளது.

தற்போது ஒருவரை இளைஞர் என வகைப்படுத்துவதற்கான வயது வரம்பு 40ஆக உள்ளது.

2019ஆம் ஆண்டு (திருத்தப்பட்ட) இளைஞர் அமைப்பு மற்றும் இளைஞர் மேம்பாட்டுச் சட்டம் அமலுக்கு வரும் நாளை வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியாக அசாங்கம் நிர்ணயித்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

இளைஞருக்கான வயது வரம்பை 30ஆகக் குறைப்பது, இளைஞர் அமைப்புகளில் தலைமை பொறுப்பு மற்றும் இதர பதவிகளை வகிப்போரின் வயதை 18 முதல் 30ஆக கட்டுப்படுத்துவது மற்றும் இளைஞர் அமைப்புகளில் தலைவர் பதவிக்கான தவணைக் காலத்தை நான்கு ஆண்டுகளாக குறைப்பது ஆகிய அம்சங்கள் அந்த சட்டத்திருத்தத்தில்  இடம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் மலேசிய இளைஞர் மன்றத்துடன் நடத்தப்பட்ட பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த புதிய விதிமுறை அமலாக்கத் தேதி நிர்ணயிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

செராசில் உள்ள அனைத்துலக இளைஞர் மையத்தின் தேசிய இளைஞர் ஆலோசக மன்ற தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசிய இளைஞர் கொள்கை மற்றும் பிற நாடுகளில் அமலில் உள்ள இளைஞர்களுக்கான வயது வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய வயது  கட்டுப்பாட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது என அவர் கூறினார். 


Pengarang :