ECONOMYMEDIA STATEMENT

அபரிமித வரவேற்பின் எதிரொலி- அடுத்தாண்டு இரு முறை சிப்ஸ் மாநாடு நடத்தப்படும்

ஷா ஆலம், நவ 24- சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை (சிப்ஸ்) மாநாட்டை ஆண்டுக்கு இரு முறை நடத்த மாநில அரசு முடிவெடுத்ததற்கு அந்த மாநாட்டிற்கு கிடைத்து வரும் அபரிமித வரவேற்பு மற்றும் கடந்த மாநாட்டின் போது எதிர்நோக்கிய இடப் பற்றாக்குறை ஆகியவை முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்த வருடாந்திர மாநாட்டிற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்  போதுமான இட வசதியை ஏற்படுத்தித் தருவதில் கோலாலம்பூர் மாநாட்டு மையம் சிரமத்தை எதிர்நோக்கியதாக வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சிப்ஸ் 2023 மாநாட்டிற்கு கிடைத்த மிகச் சிறப்பான வரவேற்பும் அதிக பேராளர்களின் வருகையும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணரத்தியுள்ளன என்று சிலாங்கூர் ஜெர்னல் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இரு வெவ்வேறு நாட்களில் இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் பங்கேற்பாளர்கள் மற்றும் வருகையாளர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும். வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு உகந்த சூழலையும் உருவாக்க இயலும் என்றார் அவர்.

இவ்வாண்டு மாநாட்டில் உணவு மற்றும் பானங்கள் தொடர்பான துறையில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த துறைக்கு மாநாட்டு மையத்தின் மேல் தளத்தை ஒதுக்கியிருந்தோம். இதனால் இப்பகுதி வருகையாளர்களின் பார்வையில் படாமல் போனது என்று அவர் மேலும் சொன்னார்.

அடுத்தாண்டு சிப்ஸ் மாநாடு இரு முறை நடத்தப்படும் என்று இங் கடந்த திங்கள் கிழமை கூறியிருந்தார். அதிகமான பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஜூலை 25 முதல் 27 வரையிலும் அக்டோபர் 17 முதல் 19 வரையிலும் இந்த மாநாடு நடத்தப்படும் என்றார் அவர்.


Pengarang :