ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை கடந்தாண்டு 1.3 விழுக்காடு குறைந்தது.

ஷா ஆலம், நவ 24- சிலாங்கூர் மாநிலத்தில் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 1.3 விழுக்காடு குறைந்து 67,200 பேராக ஆனது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 94,000 பேராக இருந்தது.

பதினைந்து முதல் முப்பது வயது வரையிலான இளைஞர்களுக்கான மனித ஆற்றல் அடிப்படை ஆய்வு கோட்பாட்டின் கீழ் வேலையில்லாதோரின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.

வேலையில்லாத மற்றும் வேலை தேடிக் கொண்டிருக்கும் தரப்பினர் வேலையில்லாதவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், 15 முதல 30 வயதுக்குட்பட்டவர்களை இளைஞர்களாக மலேசிய இளைஞர் கொள்கை வகைப்படுத்தியுள்ளது என்றார்.

கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 5.5.விழுக்காடு முதல் 7.4 விழுக்காடு வரை இருந்தது என்று அவர் மேலும் சொன்னார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று கடந்த 2018 முதல் 2023 வரை மாநிலத்தில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பான தரவுகள் குறித்து புக்கிட் லஞ்சான் உறுப்பினர் புவா பெய் லிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மாநில மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மாநில அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வருமானத்தை ஈட்டுவதற்கான மாற்று வழியாக தற்காலிக பொருளாதார நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க மாநில அரசு ரைட் எனப்படும் ரோடா டாருள் ஏஹ்சான் எனும் திட்டத்தின் வாயிலாக 550 வெள்ளி உதவித் தொகையை வழங்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


Pengarang :