ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாணவர்களின் ஆங்கிலத் திறன் அடுத்தாண்டு தொடங்கி மேம்படுத்தப்பட வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

புத்ராஜெயா, நவ 24 – மலாய் மொழியின் முக்கியத்துவம்  சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், அடுத்த ஆண்டு தொடங்கி மாணவர்கள் மத்தியில்  ஆங்கிலப் புலமையை மேம்படுத்துவது அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

வளர்ந்த நாடுகள் இரட்டை மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கருத்தில் கொண்டு  ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகள் விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.

மடாணி அரசு நிர்வாகத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நேற்றிரவு நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்வியின் தரத்தைப் பற்றி பேசினால், மலாய் பிரதான மொழியாகும்.  அனைத்து மாணவர்களும் சமரசம் செய்யாமல் இம்மொழியில் தேர்ச்சி பெற வேண்டும். அதேசமயம்,  ஆங்கில மொழியின் தரம் மற்றும் தேர்ச்சியை மேம்படுத்த புதிய முறைகளை சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

எனவே, அடுத்த ஆண்டு முதல்  மலாய் மொழியின் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதோடு ஆங்கில மொழிப் புலமையின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்  என்று அவர் கூறினார்.

இந்நாட்டில் மாணவர்களிடையே ஆங்கிலப் புலமையை மேம்படுத்த அரசு எடுக்கும்  முயற்சிகள் சர்ச்சைக்கு உள்ளாகாது எனத் தாம் நம்புவதாகவும்  அன்வார் தெரிவித்தார்.

இதற்கிடையில்,மலேசியாவில் 250 கோடி வெள்ளியை முதலீடு செய்ய   செமிகண்டக்டர் நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் ஏஜி  முன் வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த நாட்டில் முதலீடு செய்யும் அனைத்துலக  நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இளைஞர்கள் மத்தியில் நிபுணத்துவமும் பயிற்சியும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.

திவேட் பட்டதாரிகள், பொறியாளர்கள் மற்றும் கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகளில் இளைஞர்களுக்கு  பயிற்சி அளிக்க வேண்டும், இதன் மூலம் நிறுவனங்களின் தேவைகளை அவர்களால்  பூர்த்தி செய்ய முடியும் என்றார் அவர்.

இல்லையெனில் அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில்  இருந்து நிபுணர்களின் சேவையைப் பெறும்  என்று அவர் கூறினார்.


Pengarang :