ECONOMYMEDIA STATEMENTSELANGOR

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜா மூசா தோட்ட  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்

செய்தி சு.சுப்பையா

கோல சிலாங்கூர்.நவ.26- தஞ்சோங் காராங் நாடாளுமன்றம் பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதியில் உள்ளது ராஜா மூசா தோட்டம். இத்தோட்டத்திற்கு நீண்டதொரு  வரலாறு உண்டு. அதே போல் இத்தோட்டத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் நீண்ட நெடிய வரலாற்றைக்  கொண்டுள்ளது.

கோலா சிலாங்கூருக்கு அருகில் உள்ள  இத்தோட்டம் 3,000 ஏக்கர் நில பரப்பளவு  கொண்டது. முன்பு 200க்கும் மேற்பட்ட  இந்திய  குடும்பங்கள் வாழ்ந்து வந்த இடம் இது. இதில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்.

தமிழர்கள் 1870 ஆம் ஆண்டுகளில் காப்பி பயிரிட  இத்தோட்டத்திக்கு கொண்டு வரப்பட்டனர்.

தமிழர்கள் புலம் பெயர்ந்த இடங்களுக்கு எல்லாம்   தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு. இந்து சமயம் என அனைத்தையும் கட்டி கொண்டு வந்தவர்கள்.

அதே போல் இந்த ராசா மூசா தோட்டத்திற்கு வேலைக்கு வந்த தமிழர்களும் அம்மன் ஆலயத்தை கட்டி வழிபாடு செய்து வந்தனர். 1870 களில் அத்தாப்பு குடிசையாக அமைக்கப் பட்டது ராஜா மூசா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். பின்னர் சிறிய தகர கொட்டகையாக மாற்றி அமைக்கப் பட்டது.

1940களில் இத்தோட்டத்தில் தலைமை குமாஸ்த்தாவாக பணியாற்றிய வெங்கடாசலம் பிள்ளை அவர்கள் தலைமையில் ஒரு தகர கொட்டாயாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

1950 ஆம் ஆண்டுகள் வரையில் இந்த ஆலயம் தோட்ட குமஸ்த்தா கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. அதன் பின்னர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்தால் வழி நடத்தப்பட்டது.
ஸ்ரீ வெ.மாணிக்கவாசம் தலைமையேற்றது
1968 ஆம் ஆண்டு வாக்கில் ஆலய நிர்வாகம் ஆலயத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டது. 1972 ஆம் ஆண்டுகளில் மாவட்ட பொது பணி இலாகாவின் உதவியோடு 4 மீட்டர் உயரத்தில் கோபுரத்துடன் 30 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்ட கான்கிரீட்டால் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப் பட்ட  ஆலயத்தின்  குடமுழுக்கு விழாவிற்கு இத்தோட்ட மண்ணின் மைந்தரும் ம.இ.கா.வின் 6 வது தேசியத் தலைவரான தான் ஸ்ரீ வெ.மாணிக்கவாசம் தலைமையேற்று விமரிசையாக நடத்திக் கொடுத்தார்.

இந்நாட்டிற்கு   அரும் செல்வங்களை  வழங்கிய பெருமையும்  கொண்ட தோட்டம் இது. இந்தியர்களின் அரசியல், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் என்று எல்லா உரிமைகளுக்கும் போராடிய அமரர் டான் ஸ்ரீ வெ.மாணிக்கவாசகத்தை  வழங்கிய  பெருமை  இத்தோட்டத்திற்கு  உண்டு.

அவர்கள் பிறந்து வளர்ந்த தோட்டம் இந்த ராஜா மூசா தோட்டம். இத் தோட்டத்தின் தலைமை குமாஸ்தாவாக இருந்த வெங்கடாசலம் பிள்ளையின் மூத்த மகன் அமரர் தான் ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம்.

1976 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் பின்னர் ஆலயம் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு  5 வது தவணையாக குடமுழுக்கு நடை பெற ஆலய நிர்வாகம் தயாராகி கொண்டிருக்கிறது.
15 லட்சம் ரிங்கிட் செலவில் ஆலயத்தை சீரமைக்கும் பணியில்  இராஜரத்தினம் தலைமையில் ஆலய நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆலய தலைவருக்கு, தோள் கொடுத்து கடுமையாக பாடுபட்டு வருகிறார் ஆலயச் செயலாளர். ஆலய திருப்பணி வெற்றியடைய இந்துக்களின் வற்றாத ஆதரவை எதிர்பார்ப்பதாக  தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடமும் ஆலய சீரமைப்பு பணிக்கு நிதி வேண்டி கோரிக்கை  வைக்கப்பட்டுள்ளதாகவும்  இராமலிங்கம் தெரிவித்தார்.
சமூக மேம்பாட்டையும் சமய சேவையையும் சிறப்பாக செய்துவருகிறது
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள ராசா மூசா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம்  சமூக மேம்பாட்டையும் சமய சேவையையும் சிறப்பாக செய்து வருகிறது. ஆண்டு தோறும் பொங்கல் விழா, தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பொருள் உதவி, தீபாவளியின் போது வசதி குறைந்தவர்களுக்கு  பொருளுதவிகள் போன்ற நற்சேவைகள் செய்து வருகிறோம் என்று ஆலயத்தின் செயலாளர் தெரிவித்தார்.

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ராஜா மூசா தோட்ட மக்களுக்கும் சுற்று வட்டார மக்களுக்கும் சிறந்த  சேவை தளமாக உள்ளது. இப்பொழுதும்  அருகில் உள்ள தாமான் மாணிக்கவாசம் மற்றும் தோட்டத்திலும் இந்தியர்கள் வசிக்கின்றனர்.  இவ்வட்டாரத்தில் 100க்கும் அதிகமான இந்து குடும்பங்கள் உள்ளது.

ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி வருடாந்திர விழா
150 ஆண்டுகளாக ராஜா மூசா தோட்ட மக்களுக்கு சமயச் சேவையும் சமூக மேம்பாடும் ஆற்றிவரும் ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளும் பால சேனத்தில் வைத்து வழி பாடு நடை பெறுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் ஆலய சீரமைப்பு பணிகள் முடிவுற்று குட முழுக்கு விழா நடத்த ஆலய நீர்வாகம் திட்ட மிட்டுள்ளது.  15 லட்சம் ரிங்கிட் செலவில் ராஜா மூசா தோட்ட ஆலய சீரமைப்பு

இந்த ஆலயத்தின் முதல் குட முழுக்கு 1976 ஆம் ஆண்டில் தான் ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் தலைமையில் நடை பெற்றது.2 வது குட முழுக்கு 1988 ஆம் ஆண்டு டத்தோ வி.எல்.காந்தன் தலைமையில் நடை பெற்றது.
பின்னர் முறையே 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டில் குட முழுக்கு மற்றும் சீரமைப்பு பணிகள் நடை பெற்றன.

இந்த ஆலயத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பொது நலச் சேவையாளர் ராமலிங்கம் ஆலய செயலாளாராக சேவையாற்றி வருகிறார். பெரியவர் வெங்கடாசலம் பிள்ளை, கி.பெருமாள் பி.ஜே.கே., எஸ்.பி.பெரியண்ணன் பிள்ளை, நாராயணன் கங்காணி, சண்முகம் பி.பி.என்.,  இலட்சுமணன் கங்காணி, நாராயணன் நாயர் ஆசிரியர், தரும ஆறுமுகம், ராமையா கங்காணி, எல்.பாலா, கேசவன் நாயர் போன்ற தலைவர்கள் இந்த ஆலய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.

நவக்கிரம், சிவன் ஆலயம், கோவில் நுழைவாசல், கோவில் இரு பக்க சுவர், ஆலய மேற் கூரை, சுற்று வட்டார தூண்கள் சீரமைப்பு பணிகளில் முக்கியமானவை. இறுதியில் கோவில் கோபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து துணை ஆலயங்களுக்கும் வர்ணம் பூசும் வேலைகளுக்கும் பெரும் நிதி தேவைப் படுகிறது. மெய் அன்பர்கள் ஆலய திருப்பணிக்கு நன்கொடை வழங்கி 5 வது குட முழுக்கு விழா சிறப்பாக நடை பெற பேராதவு கொடுக்க வேண்டும் என ஆலய நிர்வாகம்  கேட்டுக் கொள்வதாக ஆலய    செயலாளர் ராமலிங்கம் கூறினார். 


Pengarang :