ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் திங்கியில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய உடனடி விசாரணை- நிக் நஸ்மி உத்தரவு

புத்ராஜெயா, நவ 27 – பெந்தோங்,  புக்கிட் திங்கியில்  குப்பைக் கூளங்களுடன் கூடிய வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய உடனடி விசாரணை நடத்தப்படும்.

அந்த வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடுகளைத் துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்ததைத்   தொடர்ந்து  இயற்கை வளம், சுற்றுச்சூழல்    மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாறைகள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவது உள்ளிட்ட  சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் சொன்னார்.

இருப்பினும்,  ஆற்றில் உள்ள பெரிய பாறைகள் மற்றும் வண்டல்களை அகற்ற வேண்டியுள்ளதால்  சம்பந்தப்பட்ட பகுதியை துப்புரவு  செய்ய சுமார் ஒரு மாதம் ஆகும் என்று அவர் கூறினார்.

தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் இப்பிரச்சனையைச் சமாளிக்க நீண்டகால தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  பேரிடர் பகுதியை உள்ளடக்கிய  சுற்றுச்சூழலுக்கு உகந்த  பெந்தோங் வட்டார வடிகால் பெருந்திட்டத்தை அயல்படுத்துவதும்  (பிஸ்மா) அதில் அடங்கும் என்றார் அவர்.

நேற்று, புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  கெஅடிலான் கட்சியின்  2023 ஆண்டு பேராளர் மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று காலை, நிக் நஸ்மி  பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சைஃபுரா ஓத்மானுடன் புக்கிட் திங்கியில் உள்ள  வெள்ளப் பாதிப்புக்கு பகுதிக்கு நேரில் சென்று  ஆய்வு செய்தார்.

வெள்ள நீர்  பெருக்கெடுத்த காரணத்தால் வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக நிக் நஸ்மி   தனது அதிகாரப்பூர்வ முகநூல்   பக்கத்தில் முன்னதாகப் பதிவிட்டிருந்தார்.


Pengarang :