ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமையை ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் நிராகரித்ததில்லை- அன்வார்

புத்ராஜெயா, நவ. 27- எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் மறுத்ததில்லை. நாட்டில் உள்ள எந்தவொரு பிரதிநிதியின் அலவன்சும் நடப்பு நிர்வாகத்தின் கீழ் ஒருபோதும் நிராகரிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எதிர்க்கட்சிகள் வசமுள்ள மாநிலங்களில் மேம்பாட்டு ஒதுக்கீட்டை நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்காவிட்டாலும் மாநிலங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கி வருகிறது என்று அவர் சொன்னார்.

மொத்தம்1,391 பேராளர்கள் கலந்து கொண்ட கெஅடிலான் கட்சியின் ஆண்டு தேசிய தேசிய பேராளர் மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றுகையில் கட்சியின் தேசியத் தலைவருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாஸ்  மற்றும் பெர்சத்து வசமுள்ளத் தொகுதிகளில் நாம்  ஒதுக்கீடுகளை நாம் தொடர்வோம். பள்ளிகள், மசூதிகளை உட்படுத்திய அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நாங்கள் மேற்கொள்வோம். ஆனால் நாங்கள் அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் வழங்குவதில்லை என்றார் அவர்.

எங்களை அவமதிக்கும்,  கவிழ்க்க விரும்பும், அவமதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாங்கள் ஏன் மானியத்தை வழங்க வேண்டும் என அவர் கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சிகள் மத மற்றும் இன உணர்வுகளை மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால், முன்பு ஆட்சி புரிவதற்கான  வாய்ப்பு இருந்தபோதிலும்  நாட்டை நன்றாக ஆள முடியும் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டன என பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.

தற்போதைய அரசாங்கம் மீதான ஆதரவை ஈர்ப்பதற்காக எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் அன்வார் மறுத்தார்.

சில இந்தியக் கட்சிகள்  சமூக நலன் மீது அக்கறை கொண்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது  கேள்வியெழுப்பும் போது, ​​தற்காப்பு உணர்வு கொள்ள வேண்டாம் என்று கட்சியில் உள்ள இந்தியத் தலைவர்களை அன்வார் கேட்டுக் கொண்டார். ஏனெனில் பாகுபாடு இல்லாமல்   வறுமையை ஒழிக்க பாடுபடும் ஒரே நாடு மலேசியா என்றார்.

இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் கூச்சலிடுகிறார்கள். நான் கேட்கிறேன். அவர்கள் ஆட்சியில் இருந்த போது மக்கள் சொத்துக்களை பறித்து மோசடியில் ஈடுபடவில்லையா?
எங்கள் இந்திய நண்பர்கள் இதைப் பின்பற்ற மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு இறுதிக்குள் கோப்பராசி கெஅடிலான் பெர்ஹாட் (கிரா) கூட்டுறவு சங்கத்தில்  மத்திய, மாநில மற்றும் கிளை மட்டங்களில் உள்ள அனைத்து கட்சிப் பொறுப்பாளர்களும் உறுப்பினராக வேண்டும்  என்று அன்வார் வலியுறுத்தினார்


Pengarang :