ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இடிந்து விழுந்த கிடங்கில் சிக்கியுள்ள நால்வரை மீட்கும் பணி தொடர்கிறது

ஜோர்ஜ் டவுன், நவ 29- சரக்கு விநியோகக் கிடங்கு இடிந்து விழுந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கிடையே இன்னும் சிக்கிக் கொண்டிருப்பதாக நம்பப்படும் நான்கு தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்குள்ள பாயான் லெப்பாஸ், பத்து மாவுங்கில் புதிதாக கட்டப்பட்டு வரும் சரக்கு விநியோக கிடங்கில் நேற்றிரவு இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த பகுதியிலுள்ள இடிபாடுகளை அகற்றும் பணி கனரக இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.

அந்த கிடங்கினுள் நுழைவதற்கு இடையூறாக உள்ள பெரிய  தூண்களை அகற்றுவதற்கு நாங்கள் கிரேன்களை பயன்படுத்தி வருகிறோம். இப்பணி முற்றுப் பெறுவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று அத்துறை அறிக்கை  ஒன்றில் தெரிவித்தது.

அந்த கட்டுமானப் பகுதியில் குவிந்து கிடக்கும் கட்டுமானப் பொருள்களை அகற்றி பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை அடைவதில் நாங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறோம். 

பெரியதாகவும் கனமானதாகவும் உள்ள காங்கீரிட் தூண்களை அகற்றுவது எங்களுக்கு பெரும் சவால்மிக்க பணியாக உள்ளது. சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்பதற்காக மீட்புப் பணியாளர்கள் உள்ளே நுழைவதற்கு ஏதுவாக அந்த இடிபாடுகள் அகற்றப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி நான்கு தொழிலாளர்கள் இடிபாடுகளில் இன்னும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மூவர் உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் காயங்களுக்குள்ளாகினர்.


Pengarang :