ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோத்தா கெமுனிங் தொகுதி ஆதரவில் உதவிப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், நவ 29- இங்குள்ள புக்கிட் லஞ்சோங் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப் பொருள்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

துன் ஹூசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் தலைவர் மைக்கல் கோ வழங்கிய இந்த உதவிப் பொருள்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியை கோத்தா கெமுனிங் சட்டமன்ற சேவை மையம் மேற்கொண்டது.

முதல் கட்டமாக புக்கிட் லஞ்சோங் பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாகக் கூறிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், மேலும் 60 பேருக்கு அடுத்த வாரம் உதவிப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புக்கிட் லஞ்சோங் வட்டார மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்க மைக்கல் கோ பெருமனதுடன் முன்வந்துள்ளார். அதோடு மட்டுமின்றி இப்பகுதியில் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக விழிப்படல அறுவை சிகிச்சையை வழங்குவதாகவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார் என பிரகாஷ் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த மைக்கல் கோ மற்றும் துன் ஹூசேன் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தொகுதி சார்பில் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் உதவித் தேவைப்படுவோருக்கு அபயக் கரம் நீட்டுவதில் இதர நிறுவனங்களும் அமைப்புகளும் கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையத்துடன் இணைந்து செயல்படும் எனத் தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


Pengarang :