NATIONAL

சிறார்கள் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்குத் தகவல் அளிப்பீர்- நான்சி

கூச்சிங், டிச 4 – சிறார்கள் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய செயல்களைக் கண்டால் உடனடியாக அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினர் வலியுறுத்தப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு சம்பவங்களைக் கட்டுப்படுத்த இந்த கூட்டு நடவடிக்கை அவசியமானது என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

நம்பிக்கையை நிலைநிறுத்துவது மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது கல்வியாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என்ற வகையில்   நமது பொறுப்பாகும். ஏதேனும் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால் உடனடியாக காவல்துறை அல்லது தாலியன் காசே ஹாட்லைன் 15999  என்ற எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.

இது போன்றச் சம்பவங்களைப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்வதற்குப் பதிலாக, எங்களிடம் புகார் அளியுங்கள் என்று நான்சி தெரிவித்தார்.

இன்று இங்குள்ள சமரியாங் தேசியப் பள்ளியில்  சிறார் சொற்போர் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

சிறார்களின் நான்கு முதன்மை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை,  பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் பங்கேற்பு உரிமை ஆகியவற்றை வலியுறுத்திய அவர், இந்த உரிமைகளில் ஏதேனும் ஒன்று மறுக்கப்பட்டால்,  தங்கள் அதிருப்தியை கூறவும் பெரியவர்களிடமிருந்து உதவி பெறவும் அச்சிறார்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்

சிறார்கள் பாதுகாப்பற்ற உணர்வை அல்லது அல்லது பதட்டமாக இருப்பதை உணர்ந்தால்  உதவி பெற தயங்காதீர்கள் அல்லது பயப்படாதீர்கள். அவர்கள் ஹாட்லைனை 15999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.


Pengarang :