ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை வெளியிட்டதாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு

மாராங், டிச 6- ஈராண்டுகளுக்கு முன்னர் தனது கிளினிக்கில் போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை வெளியிட்டதாக தனியார் மருத்துவர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மாஜிஸ்திரேட் அஸூரின் ஜைனால்கிப்ளி முன்னிலையில் தமக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை டாக்டர் முகமது ரேஸி ரஷிட் (வயது 52) என்ற மருத்துவர் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 7 மற்றும் 23ஆம் தேதிக்கு இடையே உள்நோக்கத்துடனும் ஏமாற்றும் நோக்கிலும் தனது வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நிலை குறித்து பொய்யான தகவல்களைப் பதிவு செய்ததாக அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 477ஏ பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

அதே காலக் கட்டத்தில் தனது வாடிக்கையாளர்களின் தடுப்பூசி நினைவூட்டல் அட்டையில் பொய்யான தகவல்களை பதிவு செய்ததாக அவர் மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். 

குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 25,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட், இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அரசுத் தரப்பில் துணைப் பப்ளிக் புரோசிகியூட்டர் எங்கு அகமது ரஷிடி எங்கு அப்டில்லா வழக்கை நடத்தும் வேளையில் மருத்துவரின் சார்பில் நஜிப் ஜக்காரியா மற்றும் அஸாஹிர் நாசீர் ஆகியோர் ஆஜராகின்றனர்


Pengarang :