ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

வெள்ளம்- பாலர் பள்ளியில் சிக்கிக் கொண்ட 38 சிறார்கள், ஆறு ஆசிரியர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

ஜோகூர் பாரு, டிச. 7- இங்கு நேற்று நண்பகல் முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட  கம்போங் முகமது அமீன் பாலர் பள்ளியின் 38 சிறார்கள் மற்றும் 6 ஆசிரியர்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பாதுகாப்பாக மீட்டது.

இச்சம்பவம் தொடர்பில் தமது துறைக்கு நேற்று மாலை மணி 3.30 அளவில் புகார் கிடைத்ததாக லார்கின் தீயணைப்பு மீட்பு மற்றும் துறைத் தலைவர் முகமட் சுஹைமி அப்துல் ஜமால் கூறினார்.

இருபது தீயணைப்பு வீரர்கள்  தீயணைப்புத் துறையின்  இரண்டு படகுகள் மற்றும் ஒரு தனியாருக்கு சொந்தமான ஒரு  படகு மூலம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

மேலும், அங்கிருந்த இரண்டு மூத்த குடிமக்களும் ஒரு மாற்றுத் திறனாளி நபரும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் அந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள உயரமான இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர்  ஒரு அறிக்கையில் கூறினார்.

நிலைமையை கண்காணிக்க தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில்,  பொந்தியான், கம்போங் பாரிட் அபாஸில் வெள்ளம் காரணமாக ஒரு வீட்டில் சிக்கிக் கொண்ட  மூன்று மூத்த குடிமக்கள், மூன்று குழந்தைகள் உட்பட  8 பேரை தாங்கள் காப்பாற்றியதாக அத்துறை  கூறியது.

மீட்கப்பட்டவர்கள் உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில்  தஞ்சம் அடைந்துள்ளனர். எனினும், இங்கு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.

நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஜோகூர் பாருவில் இருபத்தைந்து இடங்கள் திடீர் வெள்ளத்தில் மூழ்கின.


Pengarang :