ECONOMYMEDIA STATEMENT

கோவிட்-19 அதிகரிப்புக்கு எதிராக விழிப்புடன் இருப்பீர்- ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா அறிவுறுத்து

ஷா ஆலம், டிச 7- அண்மைய காலமாக நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் விழிப்புடன் இருக்கும் அதே சமயம் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்கு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் குறிப்பாக சிலாங்கூரில் இந்த நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறியது முதல் பொது மக்கள் இந்நோய்த் தொற்று விஷயத்தில் மெத்தனப் போக்கு நிலவுகிறது என்று சொன்னார்.

நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறி விட்டதால் சுற்றுப்புறங்கள் மற்றும் சுகாதார நிலை குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை என மக்கள் கருதக் கூடாது. பொது மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள், சிறார்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தங்கள் அன்றாட நடவடிக்கைகளை வழக்கம் போல் மேற்கொள்ள விரும்பும காரணத்தால் பொது மக்களில் பலர் கோவிட்-19 பெருந் தொற்று குறித்து சிறிதும் கவலையின்றி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

சமுகவியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில் மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் எழும் என்பதால் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என நாம் விரும்புவது இயல்புதான்.

இருப்பினும், நோய்ப் பரவல் சாத்தியம் உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது, நோய்க்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் விரைந்து சோதனைகளை மேற்கொள்வது  போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த நவம்பர் 19 முதல் 25 வரையிலான 47வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் 3,626 கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ரட்ஸி அபு ஹசான் கடந்த 3ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :