SELANGOR

போர்ட் கிள்ளானில் வெள்ள அபாயத்தைக் குறைக்க நீர் இறைப்பு இயந்திரங்கள் அதிகரிப்பு

ஷா ஆலம், டிச 8 – பூலாவ் இண்டா பாரம்பரிய கிராமத்தில் வெள்ள
அபாயத்தை குறைக்கும் விதமாக போர்ட் கிள்ளானில் உள்ள சுங்கை
பினாங்கில் அமைக்கப்பட்டுள்ள மதகில் கூடுதல் நீர் இறைப்பு
இயந்திரங்களை வடிகால் மற்றும் நீர்பானத் துறை பொருத்தும்.

பூர்வக் குடியினர் கிராமத்தில் புதிய மதகு கட்டுவதற்கு விதிக்கப்பட்ட
இடைக்காலத் தடையை வடிகால் நீர் பாசனத் துறையும் சென்ட்ரல்
ஸ்பெக்ட்ரம் (ம) சென் பெர்ஹாட் நிறுவனமும் அகற்றியுள்ளதாக போர்ட்
கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.

அந்த கிராமத்தை சூழ்ந்துள்ள நீர் கடலில் கலப்பதற்கு ஏதுவாக ஆற்று
முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிகளைச் சம்பந்தப்பட்ட குத்தகையாளர்
மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில்
மழைப்பொழிவின் அளவு 105 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இதனால்
பூலாவ் இண்டா பாரம்பரிய கிராமத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை
தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர்
சொன்னார்.

இப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு எனது தொகுதி சேவை
மையத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் வடிகால் மற்றும் நீர்பாசனத்
துறையின் கிள்ளான் பிரிவுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

மேலும், பூலாவ் இண்டா பகுதியில் வடிகால் முறையை தொடர்ச்சியாகச் சோதனை
செய்து வரும் கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கும் நான் நன்றி கூற
கடமைப்பட்டுள்ளேன். என அவர் தனது டிக் டாக் செயலியில்
பதிவேற்றம் செய்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் கனத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள
நிலையில் வெள்ளத்தை அபாயம் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி போர்ட் கிள்ளான் மக்கள் குறிப்பாக பூலாவ் இண்டா பாரம்பரிய கிராம குடியிருப்பாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.


Pengarang :