EKSKLUSIF -MEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு பேரரசியார் உள்பட 97 பேர் உயரிய விருதுகள்

கிள்ளான், டிச 11- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் 78வது பிறந்த
நாளை முன்னிட்டு மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு அஜிசா அமினா
மைமுனா உள்பட 97 பேர் உயரிய பட்டங்களும் விருதுகளும் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர்.
இங்குள்ள பாலாய் ரோங்ஸ்ரீயில் நடைபெற்ற இந்த விருது வழங்கும்
நிகழ்வில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவுடன் மேன்மை தங்கிய ராஜா
மூடா தெங்கு அமிர் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேரரசியார் துங்கு பெர்மைசூரி சிலாங்கூர் மாநிலத்தின்
உரிய அரச விருதான டி.கே. எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விருதுகளைப் பெறுவோர் பட்டியலில் சிலாங்கூர் அரச மன்ற
உறுப்பினர் தெங்கு டத்தோ செத்தியா புத்ரா அல்ஹாஜ் தெங்கு அஸ்மான்
ஷா அல்ஹாஜ் முதலிடம் வகிக்கிறார். அவருக்கு சிலாங்கூர் மாநிலத்தின்
இரண்டாவது உயரிய அரசு விருதான டி.கே.11 வழங்கப்பட்டது.
டத்தோஸ்ரீ அந்தஸ்தை தாங்கி வரும் ஸ்ரீ படுகா மக்கோத்தா சிலாங்கூர்
(எஸ்.பி.எம்.எஸ்.) விருதை ஆயுதப்படைகளின் தளபதி டான்ஸ்ரீ முகமது
அப்துல் ரஹ்மான், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின்
ஹூசேன், ஒய்.டி.எல். பவர் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக
இயக்குநர் இயோ சியோங் ஹோங் ஆகியோர் பெறுகின்றனர்.
டத்தோ அந்தஸ்தை தாங்கி வரும் (டி.பி.எம்.எஸ்.) படுகா மக்கோத்தா
சிலாங்கூர் விருதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சுயி லிம்
உள்பட ஒன்பது பேர் பெறுகின்றனர்.
டத்தோ சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (டி.எஸ்.ஐ.எஸ்.) விருதை 13
பேரும் செத்தியா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ்.எம்.எஸ்.) விருதை 15
பேரும் பெறுகின்றனர்.
செத்தியா சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா விருதை (எஸ்.ஐ.எஸ்.) ஷா
ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம்
உள்பட 13 பேருக்கு வழங்கப்படுகிறது.
மேலும் அஹ்லி மக்கோத்தா சிலாங்கூர் விருதை (ஏ.எம்.எஸ்.) 15 பேரும்
அஹ்லி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா விருதை (ஏ.ஐ.எஸ்.) மீடியா
சிலாங்கூர் சென். பெர்ஹாட் குழுமத்தின் பிரதான ஆசிரியர் வான் முகமது
பாரிஸ் வான் ஓமார் உள்பட 16 பேரும் இருவர் பி.கே.எஸ். விருதையும்
பி.பி.சி விருதை எழுவரும் பெறுகின்றனர்.

Pengarang :