ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இந்தோனேசியாவின் நுசான்தாராவில் முதலீடு செய்ய மாநில அரசின் துணை நிறுவனங்கள் ஆர்வம்

ஜாகர்த்தா, டிச 21- இந்தோனேசியாவின் புதிய தலைநகரான நுசான்தாராவில் முதலீடு செய்ய மாநில அரசுக்குச் சொந்தமான சில நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருவதாக சிலாங்கூர் மாநில அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான இன்வெஸ்ட் சிலாங்கூர் கூறியது.

குடியிருப்பு கட்டுமானம், சுகாதாரச் சேவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, கழிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பங்கேற்க அந்நிறுவனங்கள ஆர்வம் காட்டியுள்ளன என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி கூறினார்.

மேம்பாட்டுத் திட்டங்களின் தொடக்க காலம் முதல் வாய்ப்புள்ள துறைகளில் ஒத்துழைப்பையும் நிபுணத்துவத்தையும் வழங்க நாங்கள் விரும்புகிறோம் என்று மலேசிய மற்றும் இந்தோனேசிய ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவுக்கு நான்கு நாள் முதலீட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள மலேசிய  வெளிவர்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் குழுவில் இன்வெஸ்ட் சிலாங்கூரும் இடம் பெற்றுள்ளது. இந்த பயணம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த மேம்பாட்டுத் திட்ட விவகாரத்தில் தாங்கள் நுசான்தாரா மாநகர அதிகாரிகளுடன் தாங்கள் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தவுள்ளதோடு அவர்களிடம் விருப்ப மனுவைத் தாக்கல் செய்யவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்

நாளை நாடு திரும்பியப் பின்னர் நுசான்தாரா மேம்பாட்டுத் திட்டத்தில் சிலாங்கூரின் பங்கேற்பு குறித்து திட்டங்களை வரைவோம் என அவர் கூறினார்.


Pengarang :