ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போர் தொடங்கியது முதல் காஸாவில் 66 விழுக்காட்டு வேலைகள் இழப்பு

பெய்ரூட், டிச 21 –  இவ்வாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வெடித்ததிலிருந்து காஸாவில் குறைந்தது 66 சதவீத வேலைகள் இழக்கப்பட்டுள்ளதை    அனைத்துலக தொழிலாளர் நிறுவனம் (ஐ.எல்.ஓ.) மற்றும் பாலஸ்தீன மத்திய புள்ளி விபர அலுவலகம் (பி சி.பி எஸ்.) ஆகியவற்றின் தரவுகள் காட்டுகின்றன.

கடந்த நவம்பர் 30 வரை காஸாவில் மொத்தம் 192,000 வேலைகள்  இழக்கப்பட்டுள்ளன. அதே சமயம் மேற்குக் கரையில் வேலை வாய்ப்பு 32 சதவீதம் குறைந்தது. இது 276,000 வேலைகளுக்கு சமமானவை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் பெரும்  மனிதாபிமான பேரழிவின் மத்தியில் உள்ளனர் என்று ஐ.எல்.ஒ.வின் அரபு நாடுகளுக்கான பிராந்திய இயக்குனர் ரூபா ஜராடத் கூறினார்.

வேலையின்மை விகிதம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என்று பி.சி.பி எஸ். தலைவர் ஓலா அவாட் தெரிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதல்களில்  காஸாவில் இறந்த  பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 20,000 ஐ எட்டியுள்ளது. மேலும் 52,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்களால் இறந்த  பாலஸ்தீனர்கள்  எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ பலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.


Pengarang :