ECONOMYMEDIA STATEMENT

அந்நிய நாட்டினரை ஏற்றும் பொது போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கையா? குடிநுழைவுத் துறை மறுப்பு

புத்ராஜெயா, டிச 23- சட்டவிரோத அந்நிய நாட்டினரை ஏற்றி வரும் பொது போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக ஊடங்களில் வெளிவரும் தகவலில் உண்மை இல்லை என்று மலேசிய குடிநுழைவுத் துறை கூறியுள்ளது.

அந்நிய நாட்டினரை சோதனையிடும் அதிகாரம் பொது போக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கு இல்லை என்பதோடு பயணிகளின் தகுதியை உறுதி செய்யும் பொறுப்பையும் வழங்கி அவர்களின் சுமையை அதிகரிக்க விரும்பவில்லை என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

எனினும், தெரிந்தே அத்தகையத் தரப்பினருக்கு அவர்கள் புகலிடம் அளிப்பது கண்டு பிடிக்கப்பட்டால் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 56(1)(டி) பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என அவர் எச்சரித்தார்.

இவ்விவகாரத்தில் குடிநுழைவுத் துறை விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்பதோடு குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக குடிநுழைவுச் சட்டத்தின் கீழ உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

சட்டவிரோத அந்நிய பிரஜைகளை ஏற்றி வரும் பொது போக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்த சமூக ஊடகத் தகவல் பொய்யானது என்பதோடு அதனை பொறுப்பற்றத் தரப்பினர்  வெளியிட்டுள்ளனர் என்றார் அவர்.

இது போன்ற தகவல்களை பொது மக்கள் எளிதில் நம்பிவிடக்கூடாது என்பதோடு நம்பத் தகுந்த தரப்பினரிடமிருந்து அவர்கள் உரிய தகவல்களைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :