ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வர்த்தக லைசென்சை வாடகைக்கு விடும், அந்நியர்களை வேலைக்கமர்த்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

புத்ராஜெயா, டிச 23- கோலாலம்பூர் மாநகர் மன்றம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை குறிப்பாக, அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிபந்தனைகளை முறையாக பின்பற்றி நடக்கும்படி கோலாலம்பூரில் உள்ள வர்த்தகர்கள் நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் வளாக உரிமையாளர்களின் லைசென்ஸ் முடக்கப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலிஹா முஸ்தாபா எச்சரித்தார்.

முறையான ஆவணம் இல்லாத அந்நிய நாட்டினருக்கு வர்த்தக லைசென்ஸ்களை வாடகைக்கு விடுவது  மற்றும் சட்டவிரோத அந்நிய நாட்டினரை வேலைக்கமர்த்துவது போன்ற செயல்கள் முறியடிப்பதற்கு ஏதுவாக தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை தாம் பணித்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வர்த்தக வளாக உரிமையாளர்கள் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதில் முறையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதோடு சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கமர்த்துவதை அடியோடு நிறுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

இதனிடையே, இரு தினங்களுக்கு முன்னர் கோலாலம்பூர், ஜாலான் சீலாங்கில் அதிரடிச் சோதனை மேற்கொண்டு சட்டவிராத அந்நிய நாட்டிரைக் கைது செய்த அரச மலேசிய போலீஸ் படையின் பொது நடவடிக்கைப் பிரிவை டாக்டர் ஜலிஹா பெரிதும் பாராட்டினார்.

கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் வங்காளதேசிகள், நேப்பாள நாட்டினர் மியன்மார் பிரஜைகளை உள்ளடக்கிய 1,101 பேர் கைது செய்யப்பட்டனர்.


Pengarang :