ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காஸா மீதான ஐ.நா. தீர்மானம்-  மலேசியா வரவேற்பு

புத்ராஜெயா, டிசம்பர் 23 – அமெரிக்காவின் நியூயார்க்கில்  நேற்று   “காசாவை அளவிடுதல் மற்றும் கண்காணிப்பு உதவி” என்ற தலைப்பிலான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.)பாதுகாப்பு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை மலேசியா வரவேற்கிறது.

காசாவிற்கு  விரைவான, பாதுகாப்பான மற்றும் விரிவாக்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் அதேவேளையில் நிலையான போர் நிறுத்தமும் அமல் செய்யப்பட வேண்டும் என்று அது  கோருகிறது.

இதன் தொடர்பில்  ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப  பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் பிரதேசங்கள்  தொடர்புடைய தீர்மானங்கள் அனைத்தையும் பின்பற்றி செயல்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் மலேசியா கேட்டுக் கொண்டது.

பாதுகாப்பான மற்றும் தடையற்ற மனிதாபிமான உதவியை அனுமதிக்கும் வகையில் அவசர போர் நிறுத்தத்திற்கான கோரிக்கையை மலேசியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனர்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான மற்றும் கொடூரமான அட்டூழியங்கள் நியாயப்படுத்த முடியாதவை. அவை  உடனடியாக முடிவுக்கு வரப்பட வேண்டும்.  இஸ்ரேலிய ஆட்சியின் இடைவிடாத இன ஒதுக்கல் குற்றங்கள் தண்டனையின்றி தொடரக்கூடாது என்று வெளியுறவு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.  பொதுமக்களுக்கும்  பொதுமக்களின் சொத்துகளுக்கும் எதிரான அனைத்து தாக்குதல்களையும்  வன்முறை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கவும், அவர்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான மனிதாபிமான உதவிகளை உறுதி செய்யவும் இந்த தீர்மானம் கோருகிறது.


Pengarang :