ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

வெள்ளத்தில் விளையாடிய போது நேர்ந்த துயரம்- சிறுமி நீரில் மூழ்கி மரணம், தோழி மாயம்

பாசீர் மாஸ், டிச 25- வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது வேகமான நீரோட்டத்தில் தவறி விழுந்த ஐந்தாம் ஆண்டு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நீரில் மூழ்கிய மற்றொரு சிறுமியை தேடும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 6.39 மணியளவில் தாங்கள் பொது மக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாக  பாசீர் மாஸ் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் நிக் அமினுடின் ராஜா அப்துல்லா கூறினார்.

வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவ்விருவரும் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் சொன்னார்.

இச்சம்பவத்தின் போது நீரில் மூழ்கிய சித்தி ஆயிஷா மாஸி (வயது 11) என்ற சிறுமி பொது மக்களால் காப்பாற்றப்பட்டார். எனினும், சிகிக்சைக்காக தானா மேரா மருத்துவமனைக்கு  கொண்டுச் செல்லப்பட்ட அவர் நேற்றிரவு உயிரிழந்தார் என அவர் அறிக்கை ஒன்றில்  தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காணாமல் போன நுர் டாமியா குவாசாரா சப்ரி (வயது 11) என்ற மாணவியை தேடும் பணியில் போலீசாரும் தீயணைப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு மீது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தும் அதேவேளையில் பெரியவர்கள் கண்காணிப்பின்றி அவர்களை நீரில் விளையாட அனுமதிக்க கூடாது என அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :