ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிழக்குக் கரை  மாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு- நெகிரி செம்பிலானில் நிலைமை சீரடைகிறது

கோலாலம்பூர், டிச 25- கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில்  வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் நெகிரி செம்பிலானில் நிலைமை சீரடைந்து வருகிறது.

கிளந்தான் மாநிலத்தில் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 561 குடும்பங்களைச் சேர்ந்த 1,991 பேராக அதிகரித்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 441 குடும்பங்களைச் சேர்ந்த 1,599 பேராக இருந்தது.

பாசீர் மாஸ், தானா மேரா, குவாங் மூசாங் மாவட்டங்களில் மொத்தம் 21 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மைச் செயலகம் கூறியது.

திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது. நேற்றிரவு 253 குடும்பங்களைச் சேர்ந்த 826 பேராக இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  இன்று காலை 8.00 மணிக்கு 612 குடும்பங்களைச் சேர்ந்த 2,111 பேராக உயர்வு கண்டது.

வெள்ளத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக டுங்குன் விளங்குகிறது. இங்கு திறக்கப்பட்டுள்ள நான்கு நிவாரண மையங்களில் 110 குடும்பங்களைச் சேர்ந்த 349 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பகாங் மாநிலத்தில் ரவுப் மாவட்டம் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள வேளையில் இம்மாநிலத்தில் நேற்றிரவு 19 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 55 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேராக உயர்வு கண்டுள்ளது.

இதனிடையே நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள நீலாய், மாச்சாங் லெங்கேங் தேசிய பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் இன்று பிற்பகல் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். 


Pengarang :