ACTIVITIES AND ADSMEDIA STATEMENTYB ACTIVITIES

சமூக ஊடகங்கள் வழி மாநில அரசின் திட்டங்களைப் பிரபலப் படுத்த டுசுன் துவா உறுப்பினர் நடவடிக்கை

ஷா ஆலம், டிச 26- தொகுதி நிலையில் நடத்தப்படும் உதவிப் பணிகள் உள்பட மாநில அரசின் சமூக நலத் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பதற்கு சமூக ஊடகங்களை டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் பயன்படுத்துகிறார்.

 தகவல்களை விரைவாக பரப்புவதன் மூலம் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்கள் வாயிலாக அதிகமானோர் பயன் பெற முடியும் என்பதால் இந்த அணுகுமுறையைத் தாம் கையாண்டு வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் கூறினார்.

மக்களுக்கு பயனளிப்பதற்கும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் சுமையைக் குறைப்பதற்கும் ஏதுவாக மாநில அரசு இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) முன்னெடுப்பின் கீழ் 47 திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

இந்த முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள திட்டங்கள் மூலம் தொகுதி மக்கள் பயன் பெறும் வகையில் தொகுதி சேவை மையம் உள்பட அனைத்து சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி பிரசார நடவடிக்கைளை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மேற்கொண்டு வருகிறேன் என்றார் அவர்.

ஐ.எஸ்.பி. முன்னெடுப்பில் இடம் பெற்றுள்ள திட்டங்கள் வழி தங்கள் பெற்றோர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெற உதவும்படி  தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அடுத்தாண்டிற்கான திட்டம் குறித்து கருத்துரைத்த அவர், டுசுன் துவா தொகுதியில் போக்குவரத்து  நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக ஜோஹான் தெரிவித்தார்.


Pengarang :