ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கிளந்தானில் வெள்ளத்திற்கு மூன்று சிறார்கள் பலி- பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் வலியுறுத்து

கோத்தா பாரு, டிச 26- வடகிழக்கு பருவமழை காலத்தின் போது கடந்த நவம்பர் 21 தொடங்கி நேற்று முன்தினம் வரை கிளந்தானில் வெள்ளம் தொடர்பான மூன்று மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குபாங் கிரியானில் ஒரு சிறுவனும் பாசீர்  மாஸ் மாவட்டத்தில் இரு சிறுமிகளும் இதுவரை வெள்ளத்திற்கு பலியாகியுள்ளதாக  கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது ஜாக்கி ஹருண் கூறினார்.

நீரில் மூழ்கி மாண்டது மற்றும் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்ட  மேலும் நான்கு மரணச் சம்பவங்களுக்கும் வெள்ளத்திற்கும் தொடர்பில்லை என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

மழை காலத்தின் போது தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி  பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார். பெரியவர்களின் கண்காணிப்பின்றி அவர்கள் நீரில் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது என்பதோடு அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகளை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என்றார் அவர்.

வெள்ளப் பகுதிகளுக்குச் சென்று குதூகலமாக கொண்டாடி மகிழும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தும்படி பொது மக்கள் குறிப்பாக இளம் மோட்டார் சைக்கிள் குழுவினரை அவர் கேட்டுக் கொண்டார்.

இத்தகையச் செயல்கள் விபத்துகளுக்கு வழி வகுக்கும் என்பதோடு மீட்பு பணிகள் மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணிகளிலும் இடையூறு ஏற்படும் என்றார் அவர்


Pengarang :