ECONOMYMEDIA STATEMENT

வேலை வாய்ப்பு வாக்குறுதியால் வங்காளதேசிகள் ஏமாற்றப்பட்ட விவகாரம்- உடனடி விசாரணைக்கு அமைச்சர் வலியுறுத்து

கோலாலம்பூர், டிச 26- வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருவதாகக் கூறி அந்நிய நாட்டினரை ஏமாற்றிய வேலை வாய்ப்பு முகவர்களுக்கு எதிராக விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் வலியுறுத்தியுள்ளார்.

ஜோகூர், பெங்கேராங்கில் சாலையோரம் பெரும் கும்பலாக நடந்து சென்று கொண்டிருந்த 171 வங்காளதேச பிரஜைகளை போலீசார் கைது செய்ததாக வெளிவந்த ஊடகச் செய்தியைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

தனது தொகுதியான பெங்கேராங்கில் நிகழ்ந்த இச்சம்பவம், பெரிய அளவில் நிகழ்ந்து வரும்  மோசடிகளில் இது மிகச் சிறிய உதாரணமாக மட்டுமே விளங்குவதாக அவர் சொன்னார்.  சட்டப்பூர்வ அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது மனுக்குலத்திற்கு எதிரான குற்றச்செயலாகும். மனித உரிமை மீறிலை வர்த்தகம் உள்பட எந்த துறையிலும் நாம் அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்று அவர் சொன்னார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட வங்காளதேச தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்கின் நடவடிக்கையை தாம் பெரிதும் வரவேற்பதாக அஸாலினா குறிப்பிட்டார்.

பெங்கேராங்கில்  மட்டும் இவ்வாறு ஏமாற்றப்பட்ட 2,500க்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் உள்ளதை அத்தொகுயின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சிம்மிடம் நான் எடுத்துரைத்தேன். இந்த மோசடிக்கு பின்னால் உள்ள கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே சமயம், வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் அவர்களுக்கு யார்  வேலை பெர்மிட்டுகளை வழங்கியது என்பதும் கண்டறியப்பட வேண்டும் என அவர்  தெரிவித்தார்.


Pengarang :