SELANGOR

லிட்டில் இந்தியாவில் குடிநுழைவுத்துறை முற்றுகை- 100 அந்நியப் பிரஜைகள் கைது

கோலாலம்பூர், ஜன 2- பிரீக்பீல்ட்ஸ், லிட்டில் இந்தியா பகுதியில் குடிநுழைவுத்துறை நேற்று  நடத்திய அதிரடிச் சோதனையில் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பல குற்றங்களுக்காக 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இச்சோதனையின் போது இந்தியா, வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, மியான்மர் மற்றும் நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 370 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது  குடிநுழைவுத் துறையின் துணைத் தலைமை  இயக்குநர் (நடவடிக்கை ) ஜெப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.

இருபத்தைந்து முதல் 71 வயது வரையிலான அவர்களில் 335 பேர் ஆண்கள் என்றும் எஞ்சிய  35 பேர் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாலான் தம்பி அப்துல்லாவை சுற்றியுள்ள குடியிருப்புகள், துணிக்கடைகள், உணவகங்கள், முடிதிருத்தும் கடைகள், அழகுக் கடைகள் மற்றும் பல்பொருள் விற்பனைக் கடைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த  சோதனையில் தேசியப் பதிவுத் துறை மற்றும் பொது தற்காப்புப் படை (ஏ.பி.எம்.) ஆகியவையும்  பங்கு கொண்டன என்றார் அவர்.

இந்த நடவடிக்கையில் 100 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.  1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம், 1966 ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டத்தின்  பிரிவு 6(1)(c),  1963ஆம் ஆண்டு குடியேற்ற விதிமுறைகள் , மனிதக் கடத்தல் தடுப்பு சட்டம் மற்றும் 2007ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்  விசாரிக்க படுவதற்காக அவர்கள் செமினியில் உள்ள குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் முகாமிற்கு செல்லப்பட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

செல்லத்தக்கப் பயண ஆவணங்கள் இல்லாதது, அதிக காலம் தங்கியிருப்பது மற்றும் அங்கீகரிக்கப்படாத  அடையாள அட்டை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்களை  அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் குடிநுழைவுத் துறை, தேசிய பதிவுத் துறை மற்றும் பொது தற்காப்புப் படையின் 224 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்பகுதியில் அதிகரித்து வரும் வெளிநாட்டினர் நடமாட்டம் குறித்து பொதுமக்கள்  அளித்த புகாரைத்   தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஜெப்ரி எம்போக் குறிப்பிட்டார்.


Pengarang :