ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிறப்பாக சேவையாற்ற மானியத்தை உயர்த்துங்கள் மந்திரி புசாருக்கு வேண்டுகோள்

செய்தி ; சு.சுப்பையா,

பெட்டாலிங் ஜெயா.ஜன.3- 10,000 ரிங்கிட் மானியம் போதவில்லை. குறைந்தது 100 பேர் கொண்ட ஒரு  நிகழ்வு மேற்கொள்ள எங்களுக்கு ரி.ம. 5,000 தேவைப் படுகிறது. இதனால் ஆண்டுக்கு 2 நிகழ்ச்சிக்கு மேல் செய்ய இயலவில்லை.

தொடர்ந்து சிறப்பாக சேவையாற்ற எங்களுக்கு மானியத்தை உயர்த்துங்கள் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் பணிவுடன் கேட்டுக் கொண்டார் தாமான் மேடன் சட்டமன்ற தொகுதியின் இந்திய சமுதாய தலைவரான அசோகன் சுப்ரமணியம்.

கடந்த 5 ஆண்டுகளாக இத்தொகுதியில் இந்திய சமுதாய தலைவராக சேவையாற்றி வருகிறேன்.  சட்டமன்ற உறுப்பினரின் நிதியுதவி இன்றியே எனது சேவையை செய்து வந்தேன். தற்போது தாமான் மேடான் சட்டமன்றம் எதிர்க்கட்சியிடம் சென்று விட்டது.

அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்ற நிதி நெருக்கடி ஏற்படும். ஆகவே தான் மந்திரி புசாரிடம் கூடுதல் நிதியுதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தேன்.

இவ்வட்டாரத்தில் சிறு தொழில் செய்து வரும் இந்தியர்களுக்கு சித்தாமின் வழி பல்வேறு உதவியை செய்து வருகிறேன். அணிச்சல், சேலை இஸ்திரி, மணப்பெண் அலங்காரம், மருதானை, பலகாரம் சுடுதல் போன்ற பயிற்சிகள் நடத்தியுள்ளேன். இந்த பயிற்சி பட்டறையில் 100 பேர் வரை வந்து கலந்துக் கொண்டுள்ளனர்.

இவர்களில் குறைந்தது 30 பேர் தற்போது பகுதி நேரமாக சொந்த தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக இனாய் என்ற மருதானை போடும் பயிற்சி பெற்றவர்கள் பல்லின மக்களிடம் வியாபாரம் செய்கின்றனர். மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என்று எல்லாத் தரப்பினருக்கும் தங்களது சேவையை வழங்கி வருகிறோம்.

குறிப்பாக நோன்பு பெருநாள் மற்றும் தீபாவளி காலங்களில் நல்ல வருமானம் ஈட்டுவதாக மருதானை மற்றும் அணிச்சல் தொழிலில் ஈடுபடுபவர்கள் தெரிவித்ததாக கூறினார்.

இந்த சட்டமன்ற தொகுதியில் 12,000 த்திற்கும் கூடுதலாக இந்திய வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் வாக்குகளை அடுத்த பொதுத் தேர்தலில் கணிசமான அளவு நம்பிக்கை கூட்டணிக்கு கொண்டு வருவதே தனது இலக்கு என்று அசோகன் கூறினார்.


Pengarang :