ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூரிலுள்ள கூட்டுறவுக் கழகங்களை மறுஆய்வு செய்ய மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், ஜன 12- சிலாங்கூரிலுள்ள அனைத்து கூட்டுறவுக் கழகங்களின்
செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அந்த
கூட்டுறவுக் கழகங்களின் நடவடிக்கைகளில் மாநில அரசும் உதவும்
நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநிலத்தில் 2,010 பதிவு பெற்ற கூட்டுறவுக் கழகங்கள் உள்ளதாக
பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ
ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சிலாங்கூரில்தான் அதிகமான
கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன. இதன் அடிப்படையில் முதன் முறையாக
கூட்டுறவுக் கழகங்களுக்காக ஒரு பிரத்தியேகத் துறை ஆட்சிக்குழுவில்
உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகவே, அனைத்து கூட்டுறவுக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து
கொள்ளக்கூடிய வகையில் மாநாடு ஒன்றை நடத்தி அவர்களுக்கு
உதவுவதற்கான வழிவகைகளை ஆராயவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த
மாநாட்டிற்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை
புரிவார் என்று அவர் தெரிவித்தார்.
கூட்டுறவுக் கழகங்களின் செயல்திட்டங்கள் வறுமையை ஒழிக்கும்
முயற்சியில் முக்கியப் பங்கினை ஆற்றும் என தொழில்முனைவோர்
மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ இவோன்
பெனடிக் முன்னதாக கூறியிருந்தார்.

Pengarang :