ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் இலவச குடிநீர்த் திட்டத்தில் பங்கேற்கே பொது மக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜன 12- மாதம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் சிலாங்கூர் மாநில குடியிருப்பாளர்கள் 20 கனமீட்டர் நீரை இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

‘ஸ்கிம் ஆயர் டாருள் ஏஹ்சான்‘ எனும் இந்த திட்டத்திற்கு இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த இலவச குடிநீர் திட்டத்தில் எவ்வாறு பங்கு பெறுவது என்பதை அறிந்து கொள்வதற்கும் அத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கும் www.airselangor.com/residential/skim-air-darul=ehsan/  என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பம் செய்யுங்கள் என்று  அந்நிறுவனம் தெரிவித்தது.

விண்ணப்பதாரர்களின் குடியிருப்பு தனி மீட்டரை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதோடு ஒரு நீர் கட்டண கணக்கிற்கு ஒரு விண்ணப்பத்தை மட்டுமே செய்ய முடியும் என்றும் அது குறிப்பிட்டது.

இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருவதோடு இது வரை 40 லட்சம் பேர் இதன் வழி பயன் பெற்றுள்ளனர் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இந்த திட்டம் கடந்த பத்தாண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருவதோடு தகுதி உள்ளத் தரப்பினர் மட்டுமே பயன் பெறும் வகையில் இத்திட்டம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மாதம் 20 கனமீட்டர் நீரை இலவசமாக வழங்கும் இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான  வருமான வரம்பை 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக மாநில அரசு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி உயர்த்தியது.


Pengarang :