ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இவ்வாண்டு 56 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்க சிலாங்கூர் இலக்கு

சபாக் பெர்ணம், ஜன 12- இவ்வாண்டில் 56 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் அதிக வளர்ச்சி கண்ட மாநிலமான சிலாங்கூருக்கு கடந்தாண்டு வருகை புரிந்த 48 லட்சம் சுற்றுப்பயணிகளைக் காட்டிலும் இவ்வாண்டில் கூடுதலாக பத்து லட்சம் பேரை கவர திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.

மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் வாயிலாக இந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சாத்தியமாகும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனக் கூறிய அவர், வரும் ‘2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு‘ பிரசார இயக்கத்திற்கான முன்னேற்பாடாகவும் இது விளங்குகிறது என்றார்.

பல்வேறு தளங்கள் வாயிலாக ஏற்கனவே நடத்தப்பட்ட மற்றும் தற்போது நடத்தப்பட்டு வரும் ஊக்குவிப்புத் திட்டங்கள் வாயிலாக இவ்வாண்டு சுற்றுப்பயணிகள் வருகையில் நேர்மறையான தாக்கம் ஏற்படும் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

தாய்லாந்து சுற்றுலா முகவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தென் சிலாங்கூரை பிரபலப்படுத்தும் நோக்கிலான  மூன்று நாள் இரண்டு இரவு பிரசார இயக்கத்தின் போது டத்தோ இங் இவ்வாறு தெரிவித்தார்.

தாய்லாந்து நாட்டின் ஹட்யாய், சொங்க்லா மற்றும் பெத்தோங்கை சேர்ந்த 40 சுற்றுலா முகவர்களை வரவழைத்து அவர்கள் மத்தியில் கோல  சிலாங்கூர், சபாக் பெர்ணம் போன்ற மாநிலத்தின் தென் பிராந்தியத்திலுள்ள சுற்றுலா மையங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.

இந்த இயக்கத்தின் போது புக்கிட் மலாவத்தி, பந்தாய் ரெடாங், ஸ்கை மிரர், மின்மினிப் பூச்சி சரணாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு தாய்லாந்து சுற்றுலா முகவர்கள் வருகை புரிவர்.


Pengarang :