ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ஜோகூரில் வெள்ளப் பாதிப்பு குறைந்தது- பகாங்கில் நிலைமையில்  மாற்றமில்லை

கோலாலம்பூர், ஜன 14- ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் பகாங் மாநிலத்தில் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை.  இன்று காலை நிலவரப்படி  1,860 பேர் 18 தற்காலிக நிவாரண  மையங்களில்  தஞ்சம் புகுந்துள்ளனர். நேற்றிரவு  இந்த எண்ணிக்கை 1,869 பேராக இருந்தது.

ஜோகூர் மாநிலத்தின்  ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 துயர் துடைப்பு மையங்களில்  மொத்தம் 326 குடும்பங்களைச் சேர்ந்த 1,141 பேர்  தஞ்சம் புகுந்துள்ள  வேளையில் பகாங்கில் உள்ள ஐந்து நிவாரண மையங்களில்   215 குடும்பங்களைச் சேர்ந்த 719 பேர்  தங்கியுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின்  (நட்மா) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநிலத்தின் மெர்சிங்கில் உள்ள  நான்கு மையங்களில் மொத்தம் 611 பேர் இன்னும் அடைக்கலம் நாடியுள்ளனர்.   கோத்தா திங்கியில்  உள்ள நான்கு நிவாரண மையங்களில்  255 பேரும்  குளுவாங்கிலுள்ள இரண்டு மையங்களில்  155 பேரும்  சிகாமாட்டில் உள்ள இரண்டு மையங்களில் 88 பேரும்  பத்து பஹாட்டில் உள்ள  ஒரு மையத்தில் 32 பேரும் தங்கியுள்ளனர்.

பகாங்கின் பெக்கான், மாரான் மற்றும் ரொம்பினில்  திறக்கப்பட்டுள்ள  மூன்று நிவாரண மையங்களில்  மொத்தம் 573 பேர் தங்கியுள்ளனர்.

இதனிடையே, வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையின்  டெலிமெட்ரி நிலையத்தின் அறிக்கையின்படி  ஜோகூர், பகாங், பேராக், பெர்லிஸ் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில்  உள்ள பல ஆறுகளில் நீர் மட்டம்  இன்று காலை ஆபத்தான கட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

ஜோகூரில், கோத்தா திங்கியில்  உள்ள சுங்கை ஜோகூர் , சிகாமாட்டில் உள்ள சுங்கை மூவார், குளுவாங்கில் உள்ள சுங்கை எண்டாவ் மற்றும் மெர்சிங்கில் உள்ள சுங்கை ஜெமாலுவாங் ஆகியவையும்  பகாங்கில் சுங்கை  பகாங் மற்றும் சுங்கை ரொம்பின்  ஆகியவை அவற்றில்  அடங்கும்.

வெள்ளம், பாலம் சேதமடைந்தது  மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக  நாடு முழுவதும்  47 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக நட்மா தெரிவித்தது.


Pengarang :