ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அந்நியர்களுக்கு எதிராக குடிநுழைவுத் துறை அதிரடி நடவடிக்கை- 13 பேர் சிக்கினர்

கோல திரங்கானு, ஜன 14-  கோல நெருஸ், தோக் ஜெம்பால் திடலில் கடந்த வெள்ளிக்கிழமை மும்முரமாக கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 13 சட்டவிரோத அந்நியக் குடியேறிகள்  திரங்கானு குடிநுழைவுத் துறையால்  கைது செய்யப்பட்டனர்.

மாலை 5.30 மணியளவில் நடந்த இச்சோதனையில் 20 முதல் 55 வயதுக்குட்பட்ட 10 மியான்மர் ஆடவர்களும், மூன்று வங்காளதேச ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக  திரங்கானு மாநில குடிநுழைவுத் துறை   இயக்குனர்  அசார் அப்துல்  ஹமிட் தெரிவித்தார்.

அந்த கால்பந்து மைதானத்தில் இருந்த   59 அந்நிய நாட்டினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்லத்தக்க பயண ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக  1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின்  (2002 இல் திருத்தப்பட்டது) பிரிவு 6(1)(c) இன் கீழ் அந்த  13 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதற்கு முன்னர்  நாங்கள் வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான சிறப்பு சோதனை நடவடிக்கையை  சாலைப் போக்குவரத்துத் துறை  மற்றும் அரச மலேசிய காவல்துறையுடன் இணைந்து புக்கிட் கெசிலில் உள்ள கோலா திரங்கானு ஜே.பி.ஜே. மண்டபத்தில் நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது, தோக் ஜெம்பல் மைதானத்தில் வெளிநாட்டினர்  கால்பந்து விளையாடுவதாக  எங்களுக்கு தகவல் கிடைத்தது என்று அவர் இன்று விஸ்மா பெர்செக்குத்துவானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையில், இங்குள்ள புக்கிட் கெச்சிலில் உள்ள திரங்கானு ஜே.பி.ஜே. மண்டபத்தில் நடத்தப்பட்ட  சோதனையில்  ஆறு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக அசார் தெரிவித்தார்.

மொத்தம் 54 வெளிநாட்டினரை சோதனை  செய்ததன் மூலம் மூன்று வங்களாதேச ஆடவர்களும் இரண்டு மியான்மர் ஆடவர்களும் முறையானப் பத்திரங்கள்  இல்லாததற்காக கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கைக்காக இப்போது உலு திரங்கானு, அஜிலில் உள்ள குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் மையத்தில்   வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, கடந்த  2023ஆம் ஆண்டு  முழுவதும் திரங்கானு  மாநில குடிநுழைவுத் துறை 5,656 வெளிநாட்டினரை வெற்றிகரமாக சோதனை செய்து  1,226 பேரை பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்தது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :