ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டத்தோ ரமணன் ஏற்பாட்டில் சுங்கை பூலோ தொகுதியில் 3,000 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் விநியோகம்

சுங்கை பூலோ, ஜன 14- நாளை கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளை முன்னிட்டு சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 3,000 குடும்பங்களுக்கு பொங்கல் வைப்பதற்கான பொருட்களை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ரமணன் வழங்கினார்.

“செமாராக் காசே” எனும் இந்த நிகழ்வு தொகுதி மக்கள் குதூகலமான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாட உதவும் நோக்கில் நடத்தப்படுவதாக  தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் இங்குள்ள மக்கள் கொண்டாடும் விழாக்களின் போது உதவிப் பொருட்களை வழங்கி வருகிறேன். இந்நிலையில் பொங்கல் கொண்டாடும்  மக்களுக்கு கரும்பும் பொங்கல் வைப்பதற்கான பொருட்களையும்  கடந்தாண்டு வழங்கினேன்.

அதன் தொடர்ச்சியான இம்முறை மூவாயிரம் குடும்பங்களுக்கு இப்பொருட்கள் வழங்கப்படுகிறது. பொது மக்கள், குறிப்பாக  குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் இந்த பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இப்பொருள்கள் வழங்கப்பட்டது என அவர் சொன்னார்.

கோத்தா டாமன்சாரா, செக்சன் 6, பங்சாபுரி தஞ்சோங் குடியிருப்பாளர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாளை திங்கட்கிழமை பிறக்கும் தை மாதத்தில் பொங்கல் விழாவை கொண்டாடும் அனைத்து  மலேசிய இந்திய சமூகத்திற்கு   பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த தை மாதம் மக்களுக்கு செழிப்பு, நல்வாழ்வு , மகிழ்ச்சியைத் தரட்டும் என்று அவர் கூறினார்


Pengarang :