ECONOMYMEDIA STATEMENTNATIONAL

லவோஸில் பிடிபட்ட மலேசிய போதைப் பொருள் கடத்தல் மன்னனின் சொத்து மதிப்பு வெ.19 கோடி

கங்கார், ஜன 16- அண்மையில் லாவோஸில் கைது செய்யப்பட்ட ‘மலேசிய போதைப் பொருள் கடத்தல் மன்னன்‘ எனக் கூறப்படும் 41 வயது ஆடவனின் சொத்து மதிப்பு 19 கோடி வெள்ளி என மதிப்பிடப்படுகிறது.

பேராக் மாநிலத்தைச் சேர்ந்த அந்த கடத்தல் பேர்வழி முன்பு 1985ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் சட்டத்தின் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) (சட்டம் 316) கீழ் கைது செய்யப்பட்ட போது தொடக்கக் கட்டமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ முகமது கமாருடின் முகமது டின் கூறினார்.

நான் சொல்வது தவறு இல்லாத பட்சத்தில் முன்பு நாங்கள் மேற்கொண்ட தொடக்க பறிமுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பு 19 கோடி வெள்ளியை எட்டும். அவற்றில் ஒரு பகுதி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய சொத்துகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள பெர்லிஸ் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அப்துல் ஹலிமும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் மீது தாய்லாந்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை கடந்த 8ஆம் தேதி கூறியிருந்தார்.

தாய்லாந்து போலீசாரால் மிகவும் தேடப்பட்டு வந்த அந்த சந்தேகப்பேர்வழி கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தாய்லாந்து- லாவோஸ் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டான்


Pengarang :