Kebanyakan bas sekolah di Jammu belum beroperasi sepenuhnya walaupun sekolah-sekolah sudah dibuka semula pada 19 Ogos 2019. Foto AFP
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பள்ளி பஸ் கட்டண உயர்வு பரிந்துரை மீது ஆய்வு தேவை- போக்குவரத்து அமைச்சு கூறுகிறது

மலாக்கா, ஜன 16- இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ள புதிய பள்ளித் தவணையின் போது பள்ளி பஸ் கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரை தொடர்பில் போக்குவரத்து அமைச்சு பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்றுள்ளது. எனினும், இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரம் பெற்றோர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கியுள்ளதால் இது குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபுல்லா கூறினார்.

அதே சமயம், இந்த கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பில் பள்ளி பஸ் உரிமையாளர்கள் அல்லது சங்கங்களுடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தில் அனைவருக்கும் குறிப்பாக பெற்றோர்களுக்கு பொறுப்பு உள்ளதால் இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் கட்டண உயர்வு விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமலிருக்கிறோம் என்றார் அவர்.

நாங்கள் பல விதமான பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம். இருப்பினும் அவையாவும் இன்னும் பரிசீலனை நிலையில்தான் உள்ளன என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள தியாங் டுவாவில் மலாக்கா மாநில சாலை போக்குவரத்து இலாகாவின் வாகனமோட்டும் பயிற்சி மற்றும் சோதனைக் கழகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரவித்தார்.

இந்த பயிற்சிக் கழகத்தை மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுப் யூசோ திறந்து வைத்தார். மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் டத்தோ ரோஸ்பியாகோஸ் தாஹாவும் கலந்து கொண்டார்.

இவ்வாண்டிற்கான புதிய பள்ளித் தவணையின் போது நகர்ப்புறங்களில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் பள்ளி பஸ் கட்டணம் உயர்வு காணும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.

நடவடிக்கைச் செலவினம் மற்றும் பேருந்து பராமரிப்புச் செலவினம் அதிகரித்த காரணத்தால் பள்ளி பஸ் நடத்துநர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Pengarang :