MEDIA STATEMENTNATIONAL

அந்நிய குடியேறிகளுக்கு எதிராக இவ்வாண்டில் 870 நடவடிக்கைகள்- 4,026 பேர் கைது

கோலாலம்பூர், ஜன 20- இவ்வாண்டின் முதல் 18 நாட்களில் சட்டவிரோத அந்நியக் குடியேறிகளுக்கு எதிராக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 870 சோதனை நடவடிக்கைகளில் 4,026 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்காலக்கட்டத்தில் மொத்தம் 9,169 அந்நியக் குடியேறிகள் சோதனையிடப் பட்டதோடு நாட்டிற்குள் நுழைவதிலிருந்து 1,497 பேர் தடுக்கப்பட்டனர் என்று குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

இச் சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய 42 முதலாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையில் சட்டவிரோத அந் நியக் குடியேறிகள் இலக்காக கொள்ளப் பட்ட அதே வேளையில் அவர்களை  வேலைக்கமர்த்திய முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் முதலாளிகளுக்கு எதிராக குடிநுழைவுத்துறை சட்டத்தின் கீழ் மட்டுமின்றி 2007 ஆம் ஆண்டு மனிதக் கடத்தல் மற்றும் புலம் பெயர்ந்தோர் வர்த்தக எதிர்ப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

நேற்றிரவு செமினி தாமான் தாசேக் கெசுமா பெரேனாங் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சோதனை நடவடிக்கை குறித்து கருத்துரைத்த டத்தோ ருஸ்லின், அந்நியக் நாட்டினரின் குடியேற்ற மையங்களாக விளங்கும் நாடு முழுவதும் உள்ள 220 இடங்களில் இதுவும் ஒன்றாகும் என்றார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் 80 விழுக்காட்டினர் அந்நிய நாட்டினர் என்பதோடு அவர்கள் தங்களுக்கென சமூக கட்டமைப்பை உருவாக்கியுள்ளதோடு மளிகைக் கடைகள் மற்றும் உணவங்களையும் நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.

இந்த  சோதனையின் போது மொத்தம் 52 பேர் சோதனையிடப்பட்டு சட்டவிரோதக் குடியேறிகள் என அடையாளம் காணப்பட்ட 561 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

 

 

 


Pengarang :