ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நிலத்தில் குப்பைகளைக் கொட்ட அனுமதித்த உரிமையாளர் மீது நடவடிக்கை

ஷா ஆலம், ஜன 22- தனது நிலத்தில் மண்ணை உயர்த்தும் பணிகளை மேற்கொள்வதற்காக உண்டாகும் செலவினத்தை குறைப்பதற்காக குப்பைகளைக் கொட்ட அனுமதித்த அதன் உரிமையாளர் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் அமலாக்க நடவடிக்கைக்கு உள்ளானார்.

நிலத்தை சட்டவிரோத குப்பைக்  கொட்டும் மையமாக செயல்பட அனுமதித்ததற்கு ஈஜோக், கம்போங் ஸ்ரீ செந்தோசோ வைச் சேர்ந்த அந்த நில உரிமையாளருக்கு நகராண்மைக் கழகம் நான்கு குற்றப்பதிவுகள் வழங்கியது.

2007ஆம் ஆண்டு (எம்.பி.கே.எஸ்.) குப்பை சேகரிப்பு, அகற்றுதல் மற்றும் அழிப்புத் துணைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் அந்த உரிமையாளருக்கு குற்றப்பதிவு வெளியிடப்பட்டதாக நகராண்மைக் கழகம் கூறியது.

அந்த சட்டவிரோத குப்பைக் கொட்டும் மையத்திற்கு எதிராக இம்மாதம் 17ஆம் தேதி ஒருங்கிணைந்த அமலாக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இது தவிர, நகராண்மைக் கழகத்தின் அனுமதியின்றி அங்கு கட்டுமானத்தை நிறுவிய குற்றத்திற்காக 1973 ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் (சட்டம் 133) 70 வது பிரிவின் கீழ் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அந்த நிலத்திற்கு சென்று வரும் லோரிகளால் பிரதான சாலையில் படிந்துள்ள மண்ணை சுத்தம் செய்யும் படியும் அந்த நிலத்தின் உரிமையாளர் பணிக்கப் பட்டுள்ளார்.

மூன்று மணி நேரத்திற்கு நீடித்த இந்த சோதனையில் கோல சிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம், கோல சிலாங்கூர் பொதுப்பணி இலாகா, ஆயர் சிலாங்கூர், கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மென்ட் மற்றும் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


Pengarang :